சிக்கனமும் சிறுசேமிப்பும் பற்றிய கட்டுரை - Essay on thrift and small savings - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

சிக்கனமும் சிறுசேமிப்பும் பற்றிய கட்டுரை - Essay on thrift and small savings

  சிக்கனமும் சிறுசேமிப்பும் பற்றிய கட்டுரை

குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: 

முன்னுரை

சிறு சேமிப்பு ஒரு பார்வை

சிக்கனவாழ்வும் முன்னேற்றமும்

சேமிப்பு இல்லா வாழ்க்கை

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு

முடிவுரை

முன்னுரை: 

சேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவசியமான ஓன்று. நாம் வாழும் இந்த அவசர உலகில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. வாழ்வதற்கு பணம் தேவை என்ற நிலையில் இருந்து பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கின்றோம். அதனால் சேமிப்பு பழக்கமும் சிக்கனமும் இருந்தால் தான் ஒருவர் வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

சிறு சேமிப்பு ஒரு பார்வை

பொதுவாக மனிதர்கள் இளம் வயதில் கடுமையாகவே உழைப்பார்கள். ஆனால் முதுமையில் அவர்களிடம் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்காது. அதனால் அவர்கள் உழைக்கும் காலத்திலேயே சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். இளம் வயதில் நாம் சேமித்து வைக்கும் பணம் தான் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை நமக்கு பெற்று தரும்.

நாம் சிறிய தொகையை சேமிக்க தொடங்கினாலும் அது வருங்காலத்தில் பெரிய தொகையாக மாறிவிடும். நாம் வளரும் நம் குழந்தைகளுக்கு உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலை கொடுக்கும்.

சிக்கனவாழ்வும் முன்னேற்றமும்: 

சிக்கனவாழ்வும் முன்னேற்றமும் கண்ணுக்கே தெரியாத எறும்புகள் கூட மழை காலங்களில் உணவு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக தனக்கான உணவை கோடை காலங்களில் சேமித்து வைக்கும். அதுபோல இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உழைப்பின் ஒரு பகுதியை கட்டாயம் சேமிக்க வேண்டும். அப்போது தான் கஷ்ட காலம் என்று வரும் போது தன்னை அந்த கஷ்டத்திலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

இந்த உலகில் பிறவி பணக்காரர்களாக பிறப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் உழைப்பாலும் சேமிப்பாலும் உயர்ந்தவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் நாம் அனைவரும் சிறிய தொகையாக இருந்தாலும் அதை சேமிக்க வேண்டும்.

சேமிப்பு இல்லா வாழ்க்கை:  

நாம் வாழும் இந்த அவசர உலகில் மக்கள் ஆடம்பரமாக வாழ்வதற்கும், மற்றவர்களை விட நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்கும் தேவையற்ற வீண் செலவுகளை செய்கிறார்கள். இதுபோல செய்வதை தவிர்த்து ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டும். அது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் அதை சேமிக்க தொடங்குங்கள்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு: 

நாம் வாழும் இந்த மனித வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகளால் நிறைந்தது. எந்த நேரத்திலும் யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வேண்டுமானாலும் ஏற்படும்.

அதை எதிர்கொள்வதற்கு நமக்கு கட்டாயம் பணம் தேவை. பணம் தான் ஒரு மனிதனின் உயிரை காக்கும் மருத்துவமாக இருக்கிறது. நமக்கு ஒரு நோய் வந்தால் கூட அதை குணப்படுத்துவதற்கு பணம் தேவை. இன்றைய சேமிப்பு தான் நாளைய பாதுகாப்பு. அதனால் இன்றிலிருந்தே சேமிக்க தொடங்குங்கள்.


முடிவுரை: 

கோடையில் தான் நீரின் அருமை தெரியும் என்று சொல்வார்கள். அதுபோல தான் மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது தான் சேமிப்பின் அருமையும் புரியும். அதனால் நம் எதிர்காலத்திற்காக சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைப்போம்.

அதுபோல அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு பணத்தை மட்டும் சேமிக்காமல் கொஞ்சம் தண்ணீர், காற்று மற்றும் இயற்கை இவை மூன்றையும் சேர்த்து  பாதுகாத்து வைப்போம்.