6th Tamil Term 3 Katturai Kadithangal - 6th term 3 Tamil Katturai Kadithangal - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

6th Tamil Term 3 Katturai Kadithangal - 6th term 3 Tamil Katturai Kadithangal

 

இயல்-1 

தேசிய ஒருமைப்பாடு


முன்னுரை


      மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.



வேற்றுமையில் ஒற்றுமை


      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,


       “முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

        மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.




நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு


    “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

    ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”


என்பது பாரதி வாக்கு. சீனா படையெடுத்து வந்தபோதும், பாக்கிஸ்தான் படையெடுத்து வந்தபோதும் நாம் ஒன்றுபட்டு வெற்றிபெற்று பாரதியின் வாக்கையும் நம் தேசிய ஒருமைப்பாட்டையும் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்.



பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு


     வீடும், நாடும், உலகமும்  நலம் பெற்றுவாழ ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும். இதனையே பாரதிதாசன்,


“உலகம் உண்ண உண்பாய்

       உலகம் உடுத்த உடுப்பாய்”  

என்று கூறுகிறார்.



“யாதும் ஊரே யாவரும் கேளிர்” 

என்ற புறநானூற்று அடியும் உலக ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகிறது.



முடிவுரை 


   நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!

உலக அரங்கில் உயர்வோம்!